

பணி நியமனம் பெற்றவர்களின் உறவினர்களைப் பார்த்து முதல்வர் உற்சாகமாக அன்பை வெளிப்படுத்தினார். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் மின்வாரியத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட 401 உதவி பொறியாளர்கள் மற்றும் உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை களை முதல்வர் விஜய் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்) மூலம் மின்சார வாரியத்துக்கு 383 உதவி பொறியாளர்களும் (மின்னியல்), 18 உதவி கணக்கு அலுவலர்களும் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு 401 பேருக்கும் தனித்தனியே பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதலாவதாக கர்ப்பிணி ஒருவருக்கு அவரின் இருக்கைக்கே சென்று பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கி, அதன்பின் மேடைக்குச் சென்று ஒவ்வொருவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சிலருக்கு முதுகில் தட்டிக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஏறத்தாழ 45 நிமிடங்கள் மேடையில் நின்றவாறு அனைவருக்கும் பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கியதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.
மின்மாற்றிகள் சீரமைப்பு
முன்னதாக, எரிசக்தித் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசும்போது, “கடந்த 25 ஆண்டுகளில் மின்சாரத் துறையை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு சீரழித்து விட்டனர். மின்சார வாரியத்தில் மொத்தமுள்ள 4 லட்சம் மின்மாற்றிகளில் 25 சதவீதம் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவற்றை மாற்றியாக வேண்டும்.
அதேபோல், தற்போதுள்ள துணை மின்நிலையங்களும் இன்றைய மின்தேவைக்கு போதுமானவை அல்ல. அவற்றையும் அதிகரிக்க வேண்டும்.
15,000 இடங்கள் நிரப்பப்படும்
இன்றைய மின்தேவைக்கு ஏற்ப மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. அண்மையில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற மின்துறை ஆய்வுக் கூட்டத்தின்போது, மின்சார வாரியத்தில் 70 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினோம்.
உடனடியாக 15 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஒப்புதல் அளித்தார். அவை இந்த ஆண்டே நிரப்பப்படும். இதுபோன்று ஒரே நேரத்தில் 15 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது கடந்த 30 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை” என்றார்.
மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். நிறைவாக, எரிசக்தித்துறை செயலர் அனில் மேஷ்ராம் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் பணி நியமன ஆணை பெற்றோருடன் முதல்வர் விஜய் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.