

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமிக்கப்பட்டார். தேர்தல்களில் அதிக செலவு செய்யும் மாநிலமாக தமிழகத்தை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிக செலவு செய்யப்படுவதை உறுதிசெய்து, தேர்தலையே தேர்தல் ஆணையம் நிறுத்தியது
அப்போது அரசியல்வாதிகளிடம் அதிகளவிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2017-ல் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், பணப் பட்டுவாடா நடைபெறுவதை உறுதி செய்து, அந்ததேர்தலையும் தேர்தல் ஆணையம் நிறுத்தியது.
இதற்கிடையே தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகள் அதிக செலவு செய்யக்கூடிய தொகுதிகளாக தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
வழக்கமாக இரு தொகுதிகளுக்கு ஒரு செலவினப் பார்வையாளரை நியமிக்கும் தேர்தல் ஆணையம், இந்த முறை 151 செலவினப் பார்வையாளர்களை நியமித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
அதை கருத்தில்கொண்டே மாநில அளவில் தேர்தல் சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை ஆயகர் பவனில், இணைப்புக் கட்டிடம், அறை எண். 412-ல் அவரை சந்திக்கலாம். அவரது அலுவல தொலைபேசி எண். 044 28338378, கைபேசி எண் 7845321461, மின்னஞ்சல் முகவரி splobs.pelecd@tn.gov.in ஆகியவை மூலம் தொடர்புகொள்ளலாம்.
அதேபோல், அவரது தொடர்பு அலுவலர் ஜெகன் மோகனை 9551322999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.