

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்கள், அரசு கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவியருக்கு 12 அரசு கல்லூரி மாணவர் விடுதிகள், 6 அரசு கல்லூரி மாணவியர் விடுதிகள் என மொத்தம் 18 அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் இந்த விடுதிகளில் தங்கி படிக்கலாம்.
விடுதிக்கு எவ்வித கட்டணமும் இல்லை.அதேபோல், முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடாக ஏற்படுத் தப்பட்டுள்ளன. விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவர்களின் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிமீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ, மாணவியர் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, உரிய விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை இணைக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.