

சென்னை: குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தேசிய விருதுக்கு தகுதியான தொழில்முனைவோர்கள் வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) தேசிய விருதுகள் 2024-க்கான இணையவழி மூலம் விண்ணப்பபிப்பதற்கான செயல்முறையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த மதிப்புமிக்க விருதுகள், பல்வேறு துறைகளில் உள்ள எம்எஸ்எம்இ தொழில்முனைவோரின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும், இத்துறையில் புதுமை, சிறப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த விருதுகள், தொழில்முனைவோரின் தேசிய அளவிலான சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிப்பதன் மூலம், அவர்களை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் உதவுகின்றன.
தேசிய எம்எஸ்எம்இ விருதுகளுக்கு, உற்பத்தி, சேவை பிரிவு, ஏற்றுமதி பிரிவு, மகளிர் தொழில்முனைவோர், பட்டியலின, பட்டியல் பழங்குடியின தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் உள்ளிட்ட பிரிவுகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுகளுக்கான விண்ணப்பப் படிவத்தை https://dashboard.msme.gov.in/na/Ent_NA_Admin/Ent_NA_Ent.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பச் செயல்முறையை எளிதாக்கும் வகையில், சென்னையில் உள்ள எம்எஸ்எம்இ மேம்பாட்டு அலுவலகம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள அதன் கிளை அலுவலகங்களுடன் இணைந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழிகாட்டுதலையும் உதவியையும் வழங்கும். இத்தகவலை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.