

சென்னை: எஸ்ஐஆர் பணிகள் முடிந்து ஜனவரி மாதம் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ கூறினார்.
திமுக சட்டத்துறையின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் செயல்பாடுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
அதன்பின் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 13 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பட்டியலில் வருகிறது. இரண்டையும் சேர்த்தால் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வருகிறார்கள். இதில் யாரெல்லாம் முறையற்ற வகையில் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும்.
வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என்ற அளவீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது குறையும். அதேபோல், இந்த தேர்தல் திமுகவுக்கு சவாலாக இருக்காது. நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்.
எங்களது ஒரே கவலை, தமிழக மக்களின் ஒரு வாக்கும் முறையற்ற வகையில் நீக்கப்படக்கூடாது என்பதுதான். எஸ்ஐஆர் பணிகளில் மக்களின் குடியுரிமையை பரிசோதிப்பதில்தான் அனைவருக்கும் அச்சம் வருகிறது. அதற்கான தீர்வை உச்ச நீதிமன்றம் வழங்கும்.
எஸ்ஐஆர் பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருந்தால், திமுக சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெற்றுத்தரும். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்துள்ளது.