

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி
புதுடெல்லி: அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வானதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்தது செல்லாது என்று அறிவிக்க கோரியும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி பழனிசாமி மனுவை, உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இதில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கை நிராகரித்து கடந்த செப்.4-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சூரியமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் வழக்கறிஞர் மீனாட்சி அரோரா ஆஜரானார். பின்னர் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வானதை எதிர்த்த சூரியமூர்த்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.