

சென்னை: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தனது ரூ.1.16 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு அமலாக்கத் துறை 3 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனமான மேக்சிஸ் ரூ.3,500 கோடி வரை முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி கோரியது.
இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன்மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிந்தன.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த 2018-ல் முடக்கியது. இந்த நடவடிக்கை சரியானது என டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த ஜூன் 5-ம் தேதி உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு செய்திருந்தார்.
அதில், ‘தனக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த 2018 ஜூன் 13-ம் தேதி தான் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்தது ஆனால், அதற்கு முன்பாக 2018 மார்ச் 12-ம் தேதியே எனது ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது சட்ட விரோதம் என்பதால் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் விஜய் நாராயணன், என்.ஆர்.ஆர். அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகினர். அதையடுத்து நீதிபதிகள் இது தொடர்பாக அமலாக்கத்துறை 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.