சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல்
சென்னை: சைபர் குற்றங்கள் தொடர்பான மாநில போர்ட்டலிலும் காவல் நிலைய போர்ட்டலிலும் பதிவான முதல் தகவல் அறிக்கை எண்ணிக்கையில் முரண்பாடு காணப்பட்டதால் அதை சரிசெய்ய மாநகர, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளுக்கு சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
நாடுமுழுவதும் நாள்தோறும் புதுப்புது வகையில் சைபர் கிரைம் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பான புகார்கள் வரும்போது மாநகரம், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு விசாரித்து நடவடிக்கை எடுக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மாநில சைபர் குற்ற போர்ட்டலில் குறிப்பிட்டுள்ள முதல் தகவல் அறிக்கை எண்ணிக்கைக்கும் காவல்நிலைய சைபர் குற்ற போர்ட்டலில் குறிப்பிட்டுள்ள முதல் தகவல் அறிக்கை எண்ணிக் கைக்கும் முரண்பாடு உள்ளது.
குறிப்பாக கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மாநில சைபர் குற்ற போர்ட்டலில் 1,626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காவல் நிலைய சைபர் போர்ட்டலில் 1,246 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் மாநகர, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது: அனைத்து காவல் நிலைய சைபர் கிரைம் போலீஸாரும் சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாரில் முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனை மாநில மற்றும் காவல் நிலைய சைபர் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சில காவல் நிலையத்தில் புகாரை பெற்று சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைப்பதாக தெரிகிறது. இதனால் எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுகிறது.
எனவே சிஎஸ்ஆர் அளித்த வழக்கில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த முரண்பாடுகளை ஒரு வாரத்துக்குள் சரிசெய்ய வேண்டும்.