

நெல்லை: “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் கடன் குறித்து பேசியுள்ளார். தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது” என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார்.
பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். குடியரசுத் தலைவரும் மசோதாவை 3 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திருப்பி அனுப்புவது எந்த வகையில் நியாயம்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு சில நிமிடங்களில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதற்குத் தக்க பதிலை மக்கள் அளிப்பார்கள். தமிழக சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கும் உரிய வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. வரும் கூட்டத் தொடரில் ஆளுநர் கலந்துகொண்டு சட்டப்பேரவையின் மாண்பை மதிப்பார் என நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் கடன் குறித்து பேசியுள்ளார். தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது. கல்வி, தொழில், ஜிஎஸ்டி பங்களிப்பு என அனைத்திலும் தமிழகமே முதன்மையான இடத்தில் உள்ளது. தமிழகம் வழங்கும் 1 ரூபாய் ஜிஎஸ்டிக்கு மத்திய அரசு வெறும் 29 பைசாவை மட்டுமே திருப்பித் தருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்துக்கு 2 ரூபாய் 29 பைசா வழங்குகிறது.
2011-ல் கருணாநிதி ஆட்சியை விட்டுச் செல்லும்போது கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. 2021-ல் அதிமுக ஆட்சியை விட்டுச் சென்றபோது ரூ.5.18 லட்சம் கோடியாக உயர்ந்தது. தற்போது கடன் ரூ.9 லட்சம் கோடியாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகு 67 ஆண்டுகளில் மத்திய அரசின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் கடன் ரூ. 185 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழை மக்களுக்கான திட்டங்களை விமர்சிக்க கூடாது” என்று அவர் தெரிவித்தார்.