

வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்
சென்னை: “வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது. தாக்குதலுக்கு உள்ளான சூரஜ் இறந்துவிட்டதாக பரவும் தகவல் தவறானது. அவர் பத்திரமாக உள்ளார். கைதான சிறுவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை” என திருத்தணி சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சூரஜ் பார்த்ததை ‘முறைத்துப் பார்க்கிறாயா?' என ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதல் நடத்திய சிறார்களிடம் இருந்து 2 பட்டாக் கத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி அல்ல. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைதான நால்வரில் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒருவர் சிறார் நீதிக்குழு அறிவுறுத்தலின்படி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது. தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டதாக பரவும் தகவல் தவறானது. தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் பத்திரமாக உள்ளார்.
சூரஜ் தனது சொந்த ஊருக்கு செல்வதாக மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அது அவரின் தனிப்பட்ட விருப்பம். அது குறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது.
பட்டாக்கத்தியை சிறார்கள் அவர்களது வீட்டில் இருந்து எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணையும், ஆய்வும் நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தணியில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
இது சமூக வலைதளங்களின் காலம் என்பதை போலிஸாரும் உணர்ந்துள்ளோம். மாணவர்கள் மோதல், சிறார்களின் ரீல்ஸ்கள் கண்காணிக்கப்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிறைய வழக்குகளில், மாணவர்களின் எதிர்காலம் பாதித்துவிடக் கூடாது என பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.