

பாளையங்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
படம்: மு.லெட்சுமி அருண்
சென்னை: சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களிலும் அமைச்சர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஒருசில அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் புகார்கள் சென்றன.
இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், கூடுதல் டிஜிபியுமான அருண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அனைத்து மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தனர்.
சுப முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப் பதிவுகள் நடப்பது வழக்கம். அதனால், சார் பதிவாளர் அலுவலகங்களில் 100 டோக்கனுக்கு பதிலாக 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் 300 டோக்கன்களும் வழங்கப்படும்.
நேற்று முகூர்த்த நாள் என்பதால், அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. பத்திரப்பதிவுக்கு டோக்கள் பெற்றவர்களிடம் சில அதிகாரிகள் லஞ்சப் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தயாராக இருந்த தனிப்படை போலீஸார் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அலுவலக கதவுகள் மூடப்பட்டன. உள்ளே இருந்த அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களது செல்போன்கள் பெறப்பட்டு தனி இடத்தில் வைக்கப்பட்டன. பத்திரப் பதிவுக்காக வந்த மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.2.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவண எழுத்தர் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த 3 ஆவண எழுத்தர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்தது லஞ்சப் பணம் என்பது உறுதி செய்யப்பட்டால், 3 பேரின் ஆவண எழுத்தர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் வல்லத்தில் ரூ.30,120, துறையூரில் ரூ.30 ஆயிரம், திருவெறும்பூரில் ரூ.52 ஆயிரம், பெரம்பலூரில் ரூ.13,500, குளித்தலையில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருச்சி மாவட்டம் துறையூர், திருவெறும்பூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர், கரூர் மாவட்டம் குளித்தலை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, விக்கிரமசிங்கபுரம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
நள்ளிரவு வரை சோதனை
தாம்பரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி, தேனி, விருதுநகர், கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 62-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.37.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
43 சார் பதிவாளர்கள் மாற்றம்
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 43 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல, கீழ்நிலை அலுவலர்களுக்கும் காலி இடம் அடிப்படையில் பதவி உயர்வு, இடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வு சமீபத்தில் வழங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதவிர, பதிவுத் துறையில், பணிகளைக் கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 43 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத் துறை தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ளார்.