

சென்னை: சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், காவல்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்காணிக்கவும் தடுக்கவும் சமீபத்தில் ஒரு பிரத்யேக ‘ஊழல் ஒழிப்புப் பிரிவு’ தொடங்கப்பட்டது.
காவலர்கள் தரப்பில் லஞ்சம் கேட்கப்பட்டால், அதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க 78717 23000 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டது. புகாரளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியான முதல் வாரத்திலேயே 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக ஊழல் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் புகார்களின் மீது மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணையில் சிக்கிய எஸ்ஐ உட்பட 5-க்கும் மேற்பட்ட போலீஸார் மீது உடனடி நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
குறிப்பாக, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை விடுவிக்க லஞ்சம் கேட்ட போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு ஓய்வூதியத் தொகையை வழங்க லஞ்சம் கோரிய சென்னை காவல் ஆணையர் அலுவலக ஓய்வூதியப் பிரிவு காவலர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், லஞ்சப் புகாரில் சிக்கிய மேலும் சில காவலர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதோடு, உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.