தூய்மைப்பணி முதல் பெண்கள் பாதுகாப்பு வரை - 4 வார திட்டங்களை அறிவித்தார் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Updated on: 
2 min read

சென்னை: சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணிகளைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்தை ‘பெண்கள் பாதுகாப்பு மாதமாக’ அறிவித்து 4 வார சிறப்புத் திட்டங்களை வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், வருங்காலத் தலைமுறையினருக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு, தூய்மையான மற்றும் நிலையான தமிழகத்தை உருவாக்கும் பணிகளை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நமது வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர்கள் முன்னெடுத்தனர்.

பொது இடங்களைத் தூய்மைப்படுத்துதல், குப்பைகளை முறையாகப் பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மரக்கன்றுகளை நடுதல் என பல்வேறு பணிகளை, பொதுமக்களின் பங்களிப்புடன் தமிழகம் முழுவதும் நமது தலைவர்கள் முன்னெடுத்தனர். அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்காமல், ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய சுற்றுப்புறத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற உணர்வை இந்தப் பணிகள் மக்களிடையே உருவாக்கியுள்ளன.

கடற்கரைத் தூய்மைப் பணிகள், முக்கியமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் களப்பணிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணிகள், மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் என தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு இயக்கமாக மாற்றியுள்ளன.

கடந்த 25.09.2026 வரை, தமிழகம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 593 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 12.74 லட்சம் மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளன.

இவ்வாறு நடப்பட்டுள்ள 12.7 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள், வரும் 2031ஆம் ஆண்டுக்குள் சுமார் 16.642 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதற்கும், வரும் 2046 ஆம் ஆண்டுக்குள், சுமார் 27,278 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வை ஈடுசெய்வதற்கும் பங்களிக்கும்.

ஜூலை மாதத்தில் போதை இல்லா தமிழகம்', ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தூய்மையான மற்றும் நிலையான தமிழகம் என்ற நோக்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட நமது சமூகப் பணிகளின் தொடர்ச்சியாக, தற்போது அக்டோபர் மாதம் பெண்கள் பாதுகாப்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது மட்டுமல்ல, தங்களிடம் இருக்கும் திறமைகளை உணர்ந்து, கல்வி கற்று, பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று, உடல் மற்றும் மனநலத்துடன் வாழ்ந்து, தங்களுடைய உரிமைகளை அறிந்து, சமூகத்தின் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் சமமான பங்களிப்பை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதே இந்த மாதத்தில் மேற்கொள்ளவிருக்கும் பணிகளின் நோக்கம்.

இதனடிப்படையில் அக்டோபர் மாதம் நான்கு வாரங்களாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து முக்கியக் களங்களில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பு மற்றும் நீதி, கல்வி, பொருளாதார மேம்பாடு, உடல்நலம் மற்றும் மனநலம் அரசியல் மற்றும் சமூகப் பங்கேற்பு.

முதல் வாரம் திறனிலிருந்து தன்னிறைவு: பெண்களிடம் இருக்கும் திறமைகளின் பொருளாதார மதிப்பை உணரச் செய்வது, அந்தத் திறமைகளை வருமானம் ஈட்டும் வாய்ப்புகளாக மாற்ற உதவுவது, கல்வி, தொழில் நிதி மற்றும் சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பது ஆகியவை முதல் வாரத்தின் நோக்கமாகும்.

இரண்டாவது வாரம் தன்னம்பிக்கையும் ஆரோக்கியமான வாழ்வும்: அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரம், பெண்களின் உடல்நலம் மற்றும் மனநலத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலை, கலாச்சார நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்து அவர்களின் தன்னம்பிக்கை, சமூகத் தொடர்பு மற்றும் தனித்திறன் வெளிப்பாட்டை வலுப்படுத்துவது இந்த வாரத்தின் நோக்கம்.

மூன்றாவது வாரம் தலைமைத்துவமும் சமூகப் பங்கேற்பும்: ஒரு பெண் தனது வாழ்க்கையில் மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திலும் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தலைவராக உருவெடுக்க வேண்டும். அதற்கான தன்னம்பிக்கை, தலைமைத்துவத் திறன் மற்றும் சமூகப் பங்கேற்பை வளர்ப்பதே மூன்றாவது வாரத்தின் நோக்கம்.

நான்காவது வாரம் உரிமைகளை அறிந்து, தீர்வில் பங்கேற்பது: பெண்களுக்கான சட்ட உரிமைகள் என்ன, பிரச்சினைகள் ஏற்படும் போது எங்கு உதவி பெறலாம். தங்களுடைய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் சமூகமாக இணைந்து செயல்படுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது நான்காவது வாரத்தின் நோக்கம்.

இந்த அக்டோபர் மாதம், பெண்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் மனநலம், நீதி, கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக, அரசியல் பங்கேற்பு ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்துப் பேசுவோம். பெண்கள் இன்று உண்மையான எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காண்போம். அவை குறித்து விவாதிப்போம். நடைமுறைத் தீர்வுகளை செயல்படுத்துவோம். பெண்களுக்குப் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம். மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும் பாதுகாப்பான சமத்துவமான தமிழகம் பிறக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அண்ணாமலை </p></div>
‘ஃபிளை துபாய்’ துணை விமானி யூதர்களுக்கு எதிராகப் பேசியவர்: இஸ்ரேல் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in