“உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்” - அண்ணாமலை அறிவிப்பு

அண்ணாமலை

அண்ணாமலை

Updated on: 
1 min read

திருவாரூர்: “234 தொகுதியிலும் உள்ளாட்சிகளில் தலைவர்களை உருவாக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்” என அதன் நிறுவனர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சோழபாண்டியில் 15,000 மரக்கன்றுகளை நடும் பணியை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் இன்று மேற்கொண்டனர். டாக்டர் எம்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கினால்தான், ஆரோக்கியமான அரசியலைப் பேச முடியும்.

இதே மன்னார்குடிக்கு தற்போதைய எம்எல்ஏவை வெற்றிபெற செய்ய வந்தேன். அதுபோலத்தான் தாராபுரத்திலும் சென்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தேன். பாதம் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தேன். தற்போது அந்த எம்எல்ஏக்கள் வெற்றிபெற்ற பின்னர் அந்தக் கட்சியிலேயே இல்லை.

இத்தகைய அரசியலை உடைக்க வேண்டும். இதுபோன்ற ஒருமோசமான அரசியலுக்குள் நாமும் போக்கூடாது. இதனால் மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.

அடிப்படை பிரச்சினைகள் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைவர்களாக உருவாகின்றவர்கள் கீழிறங்கி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களை சுத்தப்படுத்துவதில் தொடங்கி, மரம் நடவைத்து அவற்றை பேணிக்காத்து மக்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும் என்கின்ற ஒற்றைக் கருத்தில் ‘வீ த லீடர்’ சமூகப்பணி நடைபெற்று வருகின்றது.

இதுபோன்ற ஓர் அரசியல் கட்சி உருவாக வேண்டும் இதற்கு தான் நாம் காத்திருந்தோம் என மக்கள் நினைக்க வேண்டும். 234 தொகுதியிலும், உள்ளாட்சிகளிலும் தலைவர்களை உருவாக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கருநாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம், ராஜ்குமார், வேட்டைத் திடல் ரமேஷ், பிரபு, வழக்கறிஞர்கள் ஐயப்பன், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

<div class="paragraphs"><p>அண்ணாமலை</p></div>
6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in