

சென்னை: அதிமுக 6 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல் ரவி ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இன்று இறுதி தீர்ப்பு அறிவித்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட 6 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்றும், மேலும், சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் எதிராக அரசியலமைப்பின் கீழ் தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் 2 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.