‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதாயம் இல்லாமல் ஆதரவு அளிக்காது என்று ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை தெரிவித்தார்.
‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட போது, டெல்லியில் அமித் ஷாவின் இல்லத்தில் திமுக எம்.பி.க்கள் இருந்தனர்.
அரசியல் எவ்வாறு மாறுகிறது, எவ்வளவு வேகமாக மாறுகிறது என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். காங்கிரஸுக்கு தற்போது என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. இந்த முறை நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பாகவே, நாடாளுமன்றத்தில் மசோதா எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னரே வெற்றி என்ற செய்தியுடன் தொகுதி மறுவரையறை மசோதா வருகிறது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இவற்றை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும்தான் இருக்க முடியும்.
தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்லதுதான். தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக அதிகரிக்கிறது.
தற்போது திருமாவளவன் உள்ளிட்டோர் எந்த தர்க்க ரீதியான காரணமும் இல்லாமல் இதை எதிர்க்கின்றனர். வலுவான பிராந்தியக் கட்சியாகவும், அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாகவும் உள்ள திமுக, இன்று காங்கிரஸ் கட்சியைத் தங்களது வீட்டு வாசலுக்கு வரவழைத்துள்ளது.
இனிவரும் நாட்களில் நிறைய அரசியல் மாற்றங்கள் நடைபெற உள்ளன. இனி அமலாக்கத் துறையும், சிபிஐயும் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். 22 எம்.பி.க்களின் ஆதரவை யாரும் சும்மா விட்டுக் கொடுத்துவிட்டு வரமாட்டார்கள். ஆதயம் இல்லாமல் திமுக ஆதரவு அளிக்காது. அவரவர்கள் தங்களுக்குரிய விலையைப் பெற்றுக் கொண்டுதான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.