“அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்

“அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்
Updated on
3 min read

கோவை: “அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் குறித்து உரிய ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறை 2-வது கடிதம் அனுப்பியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என அண்ணாமலை சாடினார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஊழல் செய்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை, தமிழக அரசுக்கு வழங்கி வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தியது.

இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. டிசம்பர் 3-ம் தேதி அமலாக்கத் துறை இரண்டாவது முறையாக பொறுப்பு டிஜிபி-க்கு 258 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அமைச்சர் நேரு தொடர்பான துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை இணைத்து அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் கட்டப்பட்டு வரும் பொதுக் கழிப்பிடங்கள், சுகாதார சேவைகள், நபார்டு வங்கி உதவியுடன் நடக்கும் திட்டங்கள், நீர்நிலைகள் மேலாண்மை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைளில் இத்தகைய ஊழல் நடந்துள்ளது.

‘வாட்ஸ் ஆப்’ மூலம் கட்சி நிதி என்ற பெயரில் ஊழல் பணம் கைமாறியுள்ளது. முதல் ஊழல் ரூ.888 கோடி பொறியாளர்கள் நியமனம், இரண்டாவது ஒப்பந்ததாரர்கள் 7.5 முதல் 10 சதவீதம் வரை ஊழல் பணம் துபாய்க்கு ஹவாலா நிதியாக சென்றுள்ளது. இத்தகைய புகார்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டபோதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. அதை செய்தால்தான் அமலாக்கத் துறை அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

அடுத்து நேருவின் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆட்தேர்வு நடக்கிறது. எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு இரண்டும் சேர்ந்தது தான். நேர்முக தேர்வில் கலந்துகொள்ள வெளியிடப்பட்ட பட்டியலில் பெரிய குளறுபடி நடந்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. அதிக மதிப்பெண்களை பெற்றவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக மூத்த அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துறை தொடர்ந்து பல்வேறு ஊழல் பிரச்சினைகள் காணப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வர் கண்டுகொள்வதில்லை. பொறுப்பு டிஜிபி-க்கு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவில் எங்கும் நடக்காத அநியாயம் தமிழ்நாட்டில் நடக்கிறது.

‘எஸ்ஐஆர்’ பணி நிறைவடையும்போது 80 லட்சம் பேர் வரை தமிழகத்தில் நீக்கப்பட வேண்டும் என பாஜக கூறியிருந்தது. தற்போது வரை 77 லட்சம் பேர் வரை வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர்.

‘எஸ்ஐஆர்’ பணிக்கு முன்பு 6 கோடியே 41 லட்சம் பேர். தற்போது நிலவரப்படி 12.5 சதவீத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆச்சரியம் மட்டுமல்ல, அதிசயமும் கூட. டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

80 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டால் தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.5 கோடியாக குறைந்துவிடும். மக்களின் கவனத்துக்கு அரசியல் கட்சியாக நாங்கள் கொண்டு வருகிறோம். தமிழக முதல்வர் இதை புரிந்துகொள்ள வேண்டும். 2026 சுத்தமான நியாயமான தேர்தலாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ள ‘இம்பீச்மென்ட்’ நடவடிக்கை 100 பேர் கையெழுத்திட்டால் முதல்கட்ட நடவடிக்கை தொடங்கும். 120 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல்முறையாக தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர் என அமித் ஷா கூறியுள்ளார்.

ஏற்கெனவே இதுவரை 11 நீதிபதிகள் மீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டுவரப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் வேறு காரணங்களுக்காக. நீதிபதி சுவாமிநாதன் மீது சாதி உள்ளிட்ட பலவற்றை புகாராக கொண்டுவந்துள்ளனர். அந்த நீதிபதி கடந்த 8 ஆண்டுகளில் 75 ஆயிரம் பெரிய வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். நீதிபதிகளை அச்சுறுத்தும் செயலில் திமுக-வினர் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை வரை கூட இந்த நடவடிக்கை செல்லாது என்பது தான் நிதர்சனம். ஆனால் நீதிபதியின் மாண்புக்கு பங்கம் விளைவித்துள்ளனர்.

இந்தியாவில் சில விவசாய சங்கத்தினர் பாஜக-விற்கு எதிராக மரபு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவதூறு பரப்பி வருகின்றனர். இந்நடவடிக்கை கடந்த 2002 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மரபு மாற்றப்பட்ட ‘பிடி’ பருத்தி கொண்டு வரலாம் என அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. பிராண்டட் விதைகளை விற்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் இறக்குமதி போன்ற நடவடிக்கைகளை சீர்படுத்தவே விதைகளுக்கான சட்ட மசோதா 2025 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெறுவார்களாக என்பதை முடிவு செய்வதற்கு அகில இந்திய தலைவர்கள், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகிய உரிய நேரத்தில் முடிவு எடுத்து உரிய நேரத்தில் கூறுவார்கள்.

பொங்கல் தொகுப்பில் பணம் கொடுப்பது, மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ் பயனாளிகளை அதிகம் இணைப்பது ஆகிய இரண்டு நடவடிக்கைகளை மட்டுமே முதல்வர் செய்ய முடியும். ஆனால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பது மக்களின் மனநிலை. தமிழகத்தில் இண்டியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய், சீமான் உள்ளதால் எதிர்வரும் தேர்தல் நான்கு முனை தேர்தலாக நடைபெறும்.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வரும் போது எதிரிகளாகத்தான் திமுகவினர் பார்க்கின்றனர். ஆனால், டெல்லியில் அனைத்து மத்திய அமைச்சர் அலுவலகங்கள் முன் திமுக எம்,பி-க்கள் தான் காணப்படுகின்றனர். வெளியில் தான் எதிராக. டெல்லி அரசியல் வேறு, தமிழக அரசு வேறுமாறியாக உள்ளது. மத்திய அமைச்சர்களை சந்திக்க அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாததை போன்ற தோற்றத்தை உருவாக்குவது, தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறுவது தவறு.

தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை பொறுத்தவரை குப்பை மேலாண்மை நடவடிக்கை சரிவர மேற்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தை குப்பை காடாக மாற்றியதே திமுக அரசின் சாதனை” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

“அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்
‘தீபத்தூண் அல்ல... சர்வே தூண் தான்!’ - திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in