

மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.பி. கார்வேந்தன். அருகில் மாநிலச் செயலாளர் மீனாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாஜக அடைந்த தோல்வியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்தும் ஆய்வுக்கு முன்னாள் மாநிலதலைவர் அண்ணாமலை வராமல் புறக்கணித்தது அவரதுஆதரவாளர் களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டது. உதகைதொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. வாக்கு சதவீத மும் குறைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தோல்வி குறித்து ஆராய பாஜகவில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழு மே 24-ல் தொடங்கி 29 வரை ஆய்வு நடத்தியது.
மதுரை நகர், கிழக்கு, மேற்கு,சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு,மேற்கு, தேனி ஆகிய 7 கட்சி மாவட்டங்களில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் எஸ்.மீனாட்சி, மாநிலச் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான எஸ்.கே. கார்வேந்தன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: அண்ணாமலை தமிழக அரசியலை விரும்புகிறார். ஆனால், அவர் தமிழகத்தில் அரசியல் செய்வதை பாஜகவின்தற்போதைய நிர்வாகிகள் விரும்பவில்லை. பாஜக மேலிடம் அண்ணாமலையை டெல்லிக்கு அழைக்கிறது. அவர் மறுத்து தமிழகத்தில் முக்கியப் பொறுப்புக் கேட்டு வருகிறார். அதுவரை கட்சியில் ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.
கட்சி மேலிடம் மீதான அதிருப்தியின் வெளிப்பாடுதான் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் மாநிலத் தலைவராக இல்லாத நிலையில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அண்ணாமலைக்கு முக்கியப் பதவி கொடுத்து கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றனர்.