“பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை தேவை” - அண்ணாமலை

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை

Updated on: 
1 min read

சென்னை: “அறிவைப் பகிர வேண்டிய பெரியார் அறிவுலகம் நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல, அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்” என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து.

அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப் பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா?

கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ஐஎஸ்பிஎண் (ISBN) எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரி பார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.

புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.

ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல, அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை</p></div>
புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடை மூலம் தரமான அரிசி வழங்க திமுக கோரிக்கை

X