

திருச்செந்தூர் நீதிமன்றத்துக்கு நேற்று வழக்கறிஞர்களுடன் வந்த திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆத்தூரில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவரை ஆத்தூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர், இரவு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அரசு வழக்கறிஞர் வனிதா மற்றும் திமுக ஆதரவு வழக்கறிஞர்கள் இடையே சுமார் 2 மணி நேரம் காரசார விவாதம் நடந்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சிதம்பரம் உத்தரவிட்டார். 10 நாட்கள் தினமும் ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜரானார். பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேருமாறு என்னிடம் பேரம் பேசினார்கள். இதுதொடர்பாக திமுக தலைமையிடம் அனுமதி பெற்று, எனது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து சட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, திமுகவை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்துடன் காவல்துறையை வைத்து விளையாட நினைக்கின்றனர். பாஜகவை கண்டும் விஜய் அஞ்சும் நிலையில் தான் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.