பாமகவும் 18 தொகுதிகளும்: அன்புமணிக்கு காத்திருக்கும் சவால்கள், சம்பவங்கள்!

பாமகவும் 18 தொகுதிகளும்: அன்புமணிக்கு காத்திருக்கும் சவால்கள், சம்பவங்கள்!
Updated on
2 min read

அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு என இரண்டாக உடைந்து கிடக்கும் நிலையில், பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் இந்த ‘தொகுதி உடன்பாடு வியூகம்’ குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

பாமக கட்சி தொடங்கியது முதலே 20 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிடும் தேர்தல் இதுதான். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய பாமக ஓர் இடத்தில் மட்டும் வென்றது. 1996 தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு 4 இடங்களில் வாகை சூடியது.

அதன்பின்னர் 2001-ல் அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளிலும், 2006-ல் திமுக கூட்டணியில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளையும் வென்றது பாட்டாளி மக்கள் கட்சி.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 3 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், 2016-ல் தனித்துப் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அதன் பின்னர் 2021-ல் அதிமுக அணியில் 5 தொகுதிகளில் பாமக வென்று மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.

இப்படி பாமக தொடங்கியது முதலே 20-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் முதல் தேர்தல் இதுதான். அதுமட்டுமின்றி பாமக இரு அணிகளாக உடைந்த பின்னர் போட்டியிடும் முதல் தேர்தலும் இதுதான்.

2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து ராமதாஸ் - அன்புமணி இடையே உருவான கசப்பு நாளுக்கு நாள் வளர்ந்து, பிரிவினை அளவுக்குச் சென்றது. இதனால் அன்புமணியின் வசம் அதிகாரப்பூர்வ பாமகவும், சின்னமும் உள்ளது. அதே நேரத்தில் பாமக தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறார் ராமதாஸ். இம்முறை ராமதாஸும், சசிகலாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.

அன்புமணியின் வியூகம் என்ன?

வட மாவட்டங்களில் இன்னமும் பாமக பலமாகவே உள்ளது. ராமதாஸின் பிரிவு பலவீனம் என்றாலும், கட்சியின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அன்புமணி பக்கமே உள்ளனர்.

அதுபோல ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைப்பார் என சில நிர்வாகிகள் நம்பியிருந்தனர். அவர் சசிகலாவோடு கூட்டணி அமைத்ததால், இன்னும் சில முக்கிய நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே பலரும் மீண்டும் அன்புமணி நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த முறை அதிமுக அணியில் 23 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை ராமதாஸின் பிரிவை காரணம் காட்டி 5 தொகுதிகளை அதிமுக குறைத்துவிட்டது. ஆனாலும், ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதால், 18 இடங்களை மனமுவந்து ஏற்றிருக்கிறார் அன்புமணி.

குறைவான இடங்களை பெற்றாலும், அதில் துல்லியமான கவனம் செலுத்தி வெற்றி பெற அன்புமணி முடிவு செய்துள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியேனும் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற நெருக்கடியும் அன்புமணி முன்பு உள்ளது. எனவே, ராமதாஸிடம் தனது தலைமையை நிரூபிக்க தீவிரமாக அன்புமணி களத்தில் இறங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வட மாவட்டங்களில் பாமக செல்வாக்கை பறைசாற்ற சவுமியா அன்புமணி ஒரு தொகுதியில் களமிறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என சொல்லப்படுகிறது.

வட மாவட்டங்களில் பவரை காட்ட அன்புமணி தயாராகும் நிலையில், அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் ‘சிறப்பான சம்பவங்கள்’ செய்ய ராமதாஸ் தரப்பும் தயாராகி வருகிறது.

நாம் வெல்கிறோமோ இல்லையோ, நம்மை புறக்கணித்தவர்களை மண்ணைக் கவ்வ செய்ய வேண்டும் என்ற ஒரே அஜெண்டாவோடு மூத்தவர் களமிறங்கியுள்ளதாக விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.

ஒருபக்கம் ஆளும் கட்சியான திமுகவின் பலமான போட்டி, இன்னொரு பக்கம் தந்தையின் தரப்பில் கொடுக்கப்படும் பகிரங்க சவால். இது இரண்டையும் தாண்டி வட மாவட்டங்கள் தனது கோட்டை என்பதை அன்புமணி நிரூபிப்பாரா என பார்ப்போம்.

பாமகவும் 18 தொகுதிகளும்: அன்புமணிக்கு காத்திருக்கும் சவால்கள், சம்பவங்கள்!
2021-ல் 20, இப்போது 27... அதிமுக கூட்டணியில் பாஜகவின் ‘தொகுதி வியூகம்’ பின்புலம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in