

சென்னை: தமிழ்நாட்டின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்காக உலக வங்கி கடனுதவியுடன் 2025-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ் பள்ளிக்கரணை சதுப்பு நில மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளித்த உலக வங்கி இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகல்கள் உலக வங்கியின் இந்திய இயக்குநர் (பொறுப்பு) Paul Procee, உலக வங்கியின் இந்திய தலைமை பொருளாதார வல்லுனர் Aurelien Kruse ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அதில், “தமிழ்நாட்டில் கடலோர வளங்களை மீட்டெடுப்பதற்காக நெய்தல் மீட்சி இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission (TNCRM) ) என்ற திட்டத்தை உலக வங்கி கடனுதவியுடன் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி தமிழக அரசு தொடங்கியது. உலக வங்கியின் கடனுதவியாக ரூ.1,172.50 கோடி, தமிழக அரசின் நிதியாக ரூ.502.50 கோடி என மொத்தம் ரூ.1,675 கோடியில் 2025 முதல் 2030 வரை மொத்தம் ஐந்தாண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இத்திட்டத்தின் நோக்கம் என்று அரசு அறிவித்தது. கடற்கரையோர பல்லுயிர் பெருக்கம், கடற்கரையோர பாதுகாப்பு, கடற்கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கடலோரப் பகுதிகளில் மாசுக்கட்டுப்பாடு ஆகிய 4 அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் கடற்கரையோர ஈர நிலங்களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பாதுகாப்பும், மறுசீரமைப்பும் இத்திட்டத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் இத்திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். சென்னை மாநகரத்தின் மிகப்பெரிய வடிநிலமாக (Drainage basin) திகழ்வது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான். உலகின் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் இந்தப் பகுதிக்கு வலசை வந்து செல்கின்றன.
15,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெய்யும் மழைநீருக்கான வடிகாலாக திகழ்கிறது. மழைநீர் வடிவதற்காக 65 கால்வாய்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகின்றன.
சென்னையின் ஒருங்கிணைந்த அங்கமான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மழைக்காலங்களில் வடிகாலாக மட்டுமின்றி, கோடைக் காலங்களில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான திட்டம் என்பது இதை மேம்படுத்துவதாகத் தான் இருக்க வேண்டும்.
ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கு பதிலாக அழிக்கும் நோக்கம் கொண்ட பணிகளைத் தான் இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1,750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான்.
ஆனால், அதற்கு பதிலாக மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிக்கும் முயற்சியை 2025-ம் ஆண்டில் தமிழக அரசு தொடங்கியது. இந்த பேரழிவுத் திட்டத்திற்காக மட்டும் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் ரூ.21.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மையப் பகுதியில் 3 கி.மீ நீளத்திற்கு 10 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதையும் அமைத்து வருகிறது.
தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும் என்பதை கடந்த செப்டம்பர் மாதத்தில் அரசின் கவனத்திற்கு பாமக கொண்டு சென்றது. ஆனால், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் விளைவாக கடந்த அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் பள்ளிக்கரணை, ஜல்லடியான் பேட்டை ஆகிய இடங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட நீர் சதுப்பு நிலத்திற்குள் செல்ல முடியாமல் தடுப்புச் சுவருக்கு வெளியில் தேங்கி நின்றுவிட்டது. வனத்துறை பணியாளர்கள் 3 நாள்களுக்கும் மேலாக போராடி, இயந்திரங்கள் மூலம் அந்த நீரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குள் அனுப்பினர்.
இனிவரும் காலங்களில் சற்று அதிக மழை பெய்தால், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வெள்ளப் பேரழிவு ஏற்படக் கூடும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சிறப்புகளை ஒட்டுமொத்த உலகமும் அறிந்திருக்கிறது. அதற்கான அங்கீகாரமாகத் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் உடன்பாட்டின் அடிப்படையில் ராம்சார் சதுப்பு நிலமாக கடந்த 2022-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சிறப்பே, மழைக்காலங்களில் சென்னை மாநகரத்தின் இயற்கையான வடிநிலமாகவும், (Drainage basin) கோடைக்காலங்களில் சென்னையின் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் நிலத்தடி நீர்படுகையாக செயல்படுவதும் தான்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இந்தத் தன்மையை சீரழிக்கும் வகையில் சுற்றுச்சுவரையும், நடைபாதையையும் கட்டுவது எந்த வகையில் அதை பாதுகாப்பதாகவும், அதன் இழந்த தன்மையை மீட்டெடுப்பதாகவும் அமையும்? பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மையமாக வைத்து திட்டமிடப்படும் மற்றொரு மாபெரும் ஊழலையும் உலக வங்கியின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் ஈர நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு முக்கியமான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகள் கடந்த 2024-ம் ஆண்டுக்குள் வரையறை செய்யப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதை இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அதை செய்ய தமிழக அரசு தயாராக இல்லை. அதற்கு காரணம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அளவிடப்பட்டு, அதன் தாக்க எல்லைகள் வரையறுக்கப்பட்டு, அறிவிக்கை செய்யப்பட்டால், அந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளையும், அடுக்குமாடி உள்ளிட்ட கட்டுமானங்களையும் எளிதாக மேற்கொள்ள முடியாது என்பது தான். எனவே தான், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்காக இந்தத் திட்டத்தை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்கிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி ஒட்டுமொத்தமாக ரூ.72,000 கோடி அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட தனியார் கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. புதிதாக வகுக்கப்படும் திட்டங்களையும் சேர்த்த்தால் இந்த மதிப்பு ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டக் கூடும். இந்தத் திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர்.
அதுமட்டும் போதாதென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் உட்பகுதியையும் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்காகத் தான் நெய்தல் மீட்சித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவரும், நடைபாதையும் கட்டப்படுகின்றன என்று சூழலியல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
உலக வங்கி கடனுதவியுடனான இந்தத் திட்டம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மையப்பகுதியில் செயல்படுத்தப்படுகிறது. தடுப்புச் சுவரும், நடை பாதையும் கட்டி முடிக்கப்பட்டால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லையை அதற்குள்ளாக சுருக்கி விடலாம்; அதற்கு வெளியில் உள்ள பகுதிகளை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்ய வழி வகுத்துக் கொடுக்கலாம் என்பது தான் ஆட்சியாளர்களின் திட்டம் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்படி ஒரு அநீதி நடப்பதற்கு உலக வங்கி துணை போகக் கூடாது என்பது தான் பாமக-வின் கவலை ஆகும்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மையப்பகுதியில் தடுப்பு சுவர், நடைபாதை அமைக்கும் திட்டத்தில் பெருமளவில் நிதி ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றுமின்றி, நெய்தல் மீட்சித் திட்டத்தின் பிற பணிகளிலும் இதே போன்று ஊழல்களும், மறைமுகமாக மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மிக மோசமான சீரழிவுகளை சந்திக்கும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடக் கூடும். இந்த பேரழிவு சதித் திட்டத்திற்கு உலக வங்கி எந்த வகையிலும் காரணமாகி விடக் கூடாது.
எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நெய்தல் மீட்சித் திட்டத்திற்கு கடன் வழங்குவதை உலக வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும். உலக வங்கியிடமிருந்து பெறப்படும் கடன் தொகை தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை சீரழிக்க எந்தெந்த வகைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்த உலக வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன்” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.