

தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டுசெல்லத் தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இது கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், கட்டுமானப் பொருள்களின் இருப்பு, அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இது எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற கேள்வியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் எம்-சாண்ட், ஜல்லி, கருங்கல் உள்ளிட்ட கனிமப் பொருள்களின் விலை அதிக அளவில் உயர்ந்தது. அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவானது.
அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்குக் கனிமப் பொருள்கள் கொண்டுசெல்லத் தடை விதித்து, கடந்த ஜூலை 27இல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.