

சென்னை: ‘ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரப்போவதில்லை. எனவே திமுக அரசை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாந்து விடாதீர்கள்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு அறிவித்திருக்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சவலைக் குழந்தையாக இருக்கிறது.
திமுக அரசை நம்பிய அரசு ஊழியர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. திமுக அரசு அறிமுகம் செய்துள்ள ஓய்வூதியத் திட்டம் குறித்து நான் என்னென்ன குற்றச்சாட்டுகளையெல்லாம் முன்வைத்தேனோ, அவை அனைத்தும் உண்மை என்பதை அரசு ஊழியர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.
ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்து விட்டாலும்கூட, அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்பாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரப்போவதில்லை.
இந்த தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகளை ஏமாற்றி வாங்கி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை திமுக அறிவித்துள்ளது. ஒருவேளை திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும்கூட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முன்வராது என்பதுதான் உண்மை.
எனவே, எவரும் திமுக அரசை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களை ஏமாற்றிய திமுக அரசை வரும் தேர்தலில் வீழ்த்துங்கள். அதன்பிறகு அமையும் ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை பாமக உறுதி செய்யும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.