

சென்னை: கைதிகளை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்துக்குள் கஞ்சா பொட்டலம் வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையிலிருந்து 15 கைதிகளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, போலீஸார் நேற்று முன்தினம் வேனில் அழைத்து வந்தனர்.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து, இரவு 7.30 மணிக்கு புழல் சிறை நோக்கி மீண்டும் புறப்பட்டனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகில் செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் கஞ்சா பொட்டலத்தை வாகனத்துக்குள் வீசினர்.
அதில் போலீஸார் இருந்ததால் 2 பேரையும் பிடித்து, கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் ராயப்பேட்டை சேர்ந்த ஜோசப் (28), விஜய் (27) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவர் மீதும், அடி தடி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே சிறையில் இருந்தபோது, சூளைமேடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு கஞ்சா வழங்க முயன்று வேனில் பொட்டலம் வீசியதாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.