

அன்புமணி
சென்னை: வேளாண் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில், வேளாண் துறையின் பல்வேறு கிளைகளில், வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்துப் பணிகளையும் செய்யும்படி திமுக அரசு கட்டாயப்படுத்து கிறது. அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கள அதிகாரிகளுக்கு பணிச்சுமை குறையும். இதுவரை 10 முதல் 12 கிராமங்களை கவனித்து வந்த அதிகாரிகள் இனி 3 முதல் 4 கிராமங்களை கவனித்தால் போதுமானது என்று அரசுத்தரப்பில்விளக்கமளிக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த திட்டத்தின் மூலம்விவசாயிகளுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்படலாம். இது வேளாண் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.எனவே, உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும், அவரவர் துறைகளில் பணி செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.