‘சாத்தான்குளம் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’: அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Updated on: 
1 min read

சென்னை: சாத்தான்குளம் முதலூரில் நடந்த கொலை மற்றும் கடத்தல் குற்றங்களுக்கு காரணமான கும்பலை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் உயிரிழந்திருக்கிறார்.

அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுதந்திரமாக உலா வந்து, வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது என்றால் அதை காவல்துறையின் தோல்வியாகத் தான் கருத வேண்டும்.

இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு அந்தக் குடும்பத்திற்கும், ஞானபிரகாசம் என்பவருக்கும் இடையிலான முன்பகை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இரு தரப்பினரிடையே முன்பகை இருக்கும்பட்சத்தில் அதனால் கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டியது உள்ளூர் காவல்துறையின் கடமையாகும். அந்தக் கடமையை காவல்துறை செய்யவில்லை.

ஒரே குடும்பத்தில் ஒருவரை கொலை செய்து விட்டு, இருவரை அரிவாளால் வெட்டிய கும்பல், இரு பெண் குழந்தைகளையும் கடத்திக் கொண்டு சென்ற கும்பலிடமிருந்து குழந்தைகள் மீட்கப் பட்டிருக்கும் போதிலும், கொலையாளிகளை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை என்பது வருந்தத்தக்கது.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தான் ஓர் அரசு மற்றும் காவல்துறையின் கடமை ஆகும். இரவில் உறங்கும் போது கூட ஒரு குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது.

சாத்தான்குளம் முதலூரில் நடந்த கொலை மற்றும் கடத்தல் குற்றங்களுக்கு காரணமான கும்பலை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அன்புமணி ராமதாஸ்</p></div>
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எதிரொலி - சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in