

சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களுக்கு மாதம் 10 நாட்களுக்கு பதிலாக 30 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியிருக்கிறார்கள். முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழகத்தில் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான புதிய முயற்சிகளை தொடங்கியிருக்கும் நிலையில், அவற்றுக்கும் ஊர்க்காவல் படையினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவைப்படும்.
இவற்றை கருத்தில் கொண்டும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் வகையிலும் ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிரந்தரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.