

அன்புமணி
சென்னை: ‘பயனற்ற ஓய்வூதிய திட்டமும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர்களை திமுக ஏமாற்ற முடியாது’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போர்வையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு எனும் பெயரில் பிப்.8-ம் தேதி ஓர் நாடகம் அரங்கேறவுள்ளது. அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிவித்தது.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக எரிமலையாக கொந்தளிக்கும் நிலையில், கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து, அரசு ஊழியர் அமைப்பு பெயரில், திமுகவே பாராட்டு விழாக்களை நடத்தினாலும், அவர்களின் ஆதரவை பெற முடியாது. திமுகவை வரும் தேர்தலில் அவர்கள் பழிதீர்க்கப் போவது உறுதி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடிபணியாளர்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதைக் கைவிட்டு, அவர்களுடன் அரசு உடனடியாக பேச்சு நடத்த வேண்டும்.காலமுறை ஊதியம், ஓய்வூதியஉயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கவேண்டும். மேலும், பணியிடைநீக்கம், இடமாற்றம் போன்றஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஏற்கெனவே இருந்த இடத்திலேயே பணிசெய்ய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.