

பாமக தலைவர் அன்புமணி
சென்னை: பாமகவின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும் என்று கட்சித் தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு: தமிழக அரசியல் பாதையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் உரிமைக்குரலாகவும் விளங்கும் பாமக ஜூலை 16-ம் தேதி 37 ஆண்டுகளை நிறைவு செய்து, 38-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் நிறுவனர் ராமதாஸ் சார்பிலும், எனது சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்பாராத அலை
ஓர் அரசியல் இயக்கத்தின் வெற்றி என்பது ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே அல்ல. அதிகாரத்துக்கு வராமலேயே அரசு இயந்திரத்தையும், அதிகாரமையத்தையும் இயங்கச் செய்வதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையான வெற்றி.
அந்த வகையில், தமிழக அரசியலில் பாமக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருமே எதிர்பாராத அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறின.
35-க்கும் மேற்பட்ட இடங்களில் நமது கூட்டணிக் கட்சி வெற்றி பெற நாம்தான் காரணமாக இருந்துள்ளோம். நாம் 4 இடங்களில்தான் வெற்றி பெற்றோம் என்றாலும் இன்றைய சூழலில் அது 40 இடங்களுக்கு சமம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அரசியல் சாதனை
ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கிப் போராடுவதில் அன்றும், இன்றும் பாமகதான் உண்மையான எதிர்க்கட்சியாக திகழ்கிறது. ஆனாலும், மக்களுக்கான உரிமைகளை போராடி பெற்றுக் கொடுக்கும் நிலையிலேயே ஓர் அரசியல் கட்சி தொடர முடியாது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை எட்ட வேண்டும் என்பதே ராமதாஸின் கனவு. அவரது கனவை நனவாக்கும் பயணத்தில் பாமகவின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும்.
இந்த ஆண்டின் அரசியலிலும், சமூகநீதியிலும் மேலும் பல சாதனைகளை படைக்கப் போகிறோம். பாமக 38-ம் ஆண்டு தொடக்க விழாவை தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் உள்ள பாட்டாளி சொந்தங்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.