

திமுக ஆட்சியில் நடைபெற்றிருப்பதாகச் சொல்லப்படும் ரூ.6 லட்சம் கோடி ஊழல் குறித்து தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமக-வின் தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அன்புமணி நேற்று வெளியிட்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, பணியாளர் நியமன ஊழல், ஒப்பந்த ஊழல், பணியிட மாற்ற ஊழல், மது வணிகத்தில் வரி ஏய்ப்பு என ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவை குறித்து தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படும். அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னையில் 3 சிறப்பு நீதிமன்றங்களும், மதுரை மற்றும் கோவையில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படும். 5 லட்சம் பேருக்கு அரசு வேலை, தனியார் துறை, சுயவேலைவாய்ப்புகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கப்படும். முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால மற்றும் மத்திய கால பயிர்கடன்கள், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும். 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் அனைவருக்கும் பட்டப்படிப்பு கட்டணமின்றி வழங்கப்படும். நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும்.
சென்னையில் செயற்கை அறிவுத்திறன் பல்கலைக்கழகம், கோவையில் திறன் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். கடலூர் மாவட்டத்தின் இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரி கடலூரில் அமைக்கப்படும். தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். மாநில அரசின் சார்பில் சமூகநீதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு) நடத்தப்படும். இதுவரை வளர்ச்சி அடையாத அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வழி வகை செய்யப்படும்.
குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். ஏழை தொழிலாளர்களின் நலன் கருதி, ரூ.10-க்கு சோறு, சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொரியல், ஊறுகாயுடன் நிறைவான மதிய உணவு வழங்கப்படும். ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.25-க்கு அசைவ மதிய உணவு வழங்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். பேருந்துக் கட்டணம் உயராது. மின் கட்டணம் குறைக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது சிற்றுண்டி வழங்கப்படும். தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.