

விழுப்புரம்: பாமகவில் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த தந்தை - மகன் அதிகாரப் பகிர்வு பிரச்சினை ராமதாஸ் திருமண நாளில் முடிவுக்கு வந்தது. பாமக தலைவர் அன்புமணியும், நிறுவனர் ராமதாஸூம் ஒருவரையொருவர் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தினர்.
பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அதன் தலைவர் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சினையால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இருதரப்பும் தனித்தனியாக செயல்பட்டனர். ராமதாஸின் மிகக் கடுமையான விமர்சனத்தையும் மீறி சவுமியா அன்புமணி உள்பட 4 பாமக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். தேர்தலுக்கு பிறகு அன்புமணியின் கை ஓங்கியது. தைலாபுரத்துக்கு வருவதை பாமகவினர் குறைத்துக் கொண்டனர். யாரையும் சந்திக்காமல் பொது பிரச்சினைகளுக்காக சில அறிக்கைகளை மட்டும் ராமதாஸ் வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில் தந்தை, மகனை இணைக்க குடும்ப உறவுகளும், முக்கிய நபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக ராமதாஸின் திருமண நாள் சரியானதாக இருக்கும் என நாள் குறிக்கப்பட்டது. அதன்பேரில் ராமதாஸ் - சரஸ்வதி இணையரின் 61-வது திருமண நாளையொட்டி அவர்களிடம் ஆசி பெறுவதற்காக அன்புமணி, அவரது மனைவி சவுமியா, மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா, இரு மருமகன்கள், பேரப்பிள்ளைகள் என அனைவரும் நேற்று தைலாபுரத்துக்கு வருகை தந்தனர்.
ராமதாஸ் தரப்பினர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஒன்றரை ஆண்டுகளாக மகனை சந்திப்பதை தவிர்த்து வந்த ராமதாஸ் நேற்று மகனை கண்டதும் கட்டித் தழுவினார். இருவரும் கண்ணீர் சிந்தினர். தாயையும் அன்புமணி அரவணைத்தார். மேலும் பேரப் பிள்ளைகள் மற்றும் கொள்ளு பேரப் பிள்ளைகளையும் கொஞ்சி மகிழ்ந்தார். அப்போது அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனைவரும் அவர்களது காலில் விழுந்து ஆசிபெற்றனர். பின்னர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
பின்னர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “அப்பா - அம்மாவின் 61-வது திருமண நாள். இதனால் குடும்பத்துடன் சென்று வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டோம். இனி நல்லது நடக்கும்” என்றார். ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது பாமகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஸ்ரீகாந்தி அதிருப்தி
ராமதாஸை அன்புமணி குடும்பத்துடன் வந்து சந்தித்தபோது அவரது இளைய சகோதரி கவிதா உடன் இருந்தார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, அவரது மகன் முகுந்தன் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். தலைவர் பதவியை தன்வசப்படுத்திக் கொண்டதாக அறிவித்த ராமதாஸ், அன்புமணிக்கு வழங்கிய செயல் தலைவர் பதவியை மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கொடுத்தார். தந்தை - மகன் ஒன்றாக இணைந்தாலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்கிறது. பாமக செயல் தலைவர் பதவியில் ஸ்ரீகாந்தி இருப்பதால் கட்சியிலும் புகைச்சல் தொடரும் என கருதப்படுகிறது.