‘மருத்துவக் காரணங்களால் ராமதாஸ் கட்சி நிர்வாக முடிவுகளை எடுக்க இயலாது’ - அன்புமணி மனு தாக்கல்

‘மருத்துவக் காரணங்களால் ராமதாஸ் கட்சி நிர்வாக முடிவுகளை எடுக்க இயலாது’ - அன்புமணி மனு தாக்கல்
Updated on
1 min read

சென்னை: ‘87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பாமகவின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. இதை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக வழி நடத்துகின்றனர்’ என்று உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாமகவில் தந்தை - மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி தரப்பில் பதில் மனு மற்றும் ராமதாஸ் மனுவை நிராகரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யபட்டது.

அதில், ‘ராமதாஸுக்கு தற்போது 87 வயது ஆகிவிட்டது. வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் கட்சியின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. இதைப் பயன்படுத்தி சிலர் ராமதாஸை தவறாக வழி நடத்துகிறார்கள். சில தனி நபர்கள் பாமக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

ராமதாஸ் தன்னைத்தானே பா.ம.கவின் தலைவர் என அறிவித்துக் கொண்டது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. பா.ம.கவின் நிறுவனர் என்ற அடிப்படையில் பாமக கட்சியில் ஆலோசனை வழங்கவும் கட்சியின் வழிகாட்டுதல் மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால், கட்சியின் முடிவுகளை எடுக்க பாமகவின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. பொதுக்குழு மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுக்க உரிமை உள்ளது.

ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பாமக கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர நிறுவனருக்கு உரிமை, அதிகாரம் இல்லை.

தன்னைத் தானே தலைவர் என ராமதாஸ் அறிவித்துக் கொண்டு விதிகளை திருத்தி தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அன்புமணி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அன்புமணி தாக்கல் செய்த மனுவுக்கு மார்ச் 11-ம் தேதிக்குள் ராமதாஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

‘மருத்துவக் காரணங்களால் ராமதாஸ் கட்சி நிர்வாக முடிவுகளை எடுக்க இயலாது’ - அன்புமணி மனு தாக்கல்
தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் - வேகமெடுக்கும் கரூர் நெரிசல் வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in