ஆக.15 கிராம சபை கூட்டங்களில் மேகேதாட்டு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை

பாமக தலைவர் அன்புமணி | கோப்புப் படம்

பாமக தலைவர் அன்புமணி | கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: ஆக.15-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசால் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில், மொழி, இனவெறி அமைப்புகளால் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களையும் கர்நாடக அரசு ஊக்குவித்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு எதிரான நல்லுறவை சிதைக்கும் வகையிலான கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தைக் கூட கர்நாடக அரசால் கூற முடியாது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூரின் குடிநீர் தேவையை நிறைவேற்றவே மேகேதாட்டு அணையை கட்ட முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. மேகேதாட்டு அணைக்காக கர்நாடக அரசின் முன்வைக்கப்படும் ஒரே வாதம் இது மட்டும் தான். ஆனால், இந்த வாதம் தவறு என்பதற்கு பல காரணங்களை பாமக ஏற்கனவே முன்வைத்துள்ளது. பெங்களூருக்குத் தேவையான அளவு குடிநீரை இப்போதுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், அதிலிருந்து 4 டிஎம்சி நீரை பெங்களூருக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். ஆனால், அதுவே தேவையில்லை என்ற குரல்கள் கர்நாடக அதிகாரிகள் மத்தியிலேயே எழுந்துள்ளன. மேகேதாட்டு அணை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் பெங்களூர் நகரத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது.

ஆனால், பெங்களூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள டி.ஜி.ஹள்ளி எனப்படும் திப்பகன்டன ஹள்ளி அணையில் இன்றைய நிலையில் 2.2 டி.எம்.சி நீர் உள்ளது. 74 அடி உயரம் கொண்ட இந்த அணையில் அதிகபட்சமாக 3.4 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நீரை பெங்களூருக்கு கொண்டு செல்ல ஏற்கனவே குழாய் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணையின் நீரை பயன்படுத்திக் கொள்ள கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.

அதனால், மேகேதாட்டு அணை கட்டுவதை கைவிட்டு, டி.ஜி.அள்ளி அணையின் நீரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அம்மாநில அதிகாரிகளே தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் மேகேதாட்டு அணையை கட்டுவதற்காக கர்நாடக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒற்றை வாதமும் முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால், மேகேதாட்டு அணைக்கு எதிராக தமிழ்நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து நியாயங்களும் அப்படியே உள்ளன.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணைகளின் கொள்ளளவான 114.57 டி.எம்.சியுடன், புதிய அணையின் 70 டி.எம்.சி கொள்ளளவையும் சேர்த்து மொத்தம் 184.57 டி.எம்.சி நீரை கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியும். அவ்வளவு நீர் தேக்கி வைக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு துளி நீர் கூட வராது. அப்போது காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்.

அதுமட்டுமின்றி, மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் 12,500 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் மூழ்கி விடும்; இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் வனவிலங்குகள், மீன்கள், பறவைகள் உள்ளிட்ட அரிய விலங்குகள் அனைத்து அழிந்து விடும். 5 கோடி தமிழக மக்களையும், பெருமளவிலான அரிய வகை உயிரினங்களையும் பாதிக்கக் கூடிய மேகேதாட்டு அணையை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக மத்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும் தமிழக அரசு இன்னும் வலிமையாக வாதாட வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசுடன் ஒருபோதும் பேச்சு நடத்தக் கூடாது. மேகேதாட்டு அணைக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி புதிய அணை கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான வலிமையான அவை அடித்தட்டு மக்களும் பங்கேற்கக் கூடிய கிராம அவைகள் தான் என்று பாமக கருதுகிறது.

இந்தியாவின் 80-ம் ஆண்டு விடுதலை நாள் விழா வரும் ஆகஸ்ட் 15-ம் நாள் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அந்த நாளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அந்தக் கூட்டத்தில் பாமகவினர் பெருமளவில் கலந்து கொண்டு, “காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தையும், தமிழ்நாடு முழுவதும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கக் கூடிய மேகேதாட்டு அணையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசால் தாக்கல் செய்யப்படவுள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. மாறாக, மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசால் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்ற தீர்மானத்தை மக்கள் ஆதரவுடன் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

<div class="paragraphs"><p>பாமக தலைவர் அன்புமணி | கோப்புப் படம்</p></div>
கரூர் கோயில் இனாம் நிலம் பதிவு தடை நீக்கத்துக்கு எதிராக புதிய வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in