

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 600-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் மூடப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. திமுக அரசால் தமிழ்நாட்டில் தொழில்துறை சீரழிந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வரும் தேர்தலில் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 600-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் மூடப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஊழல் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை திமுக அரசு சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2021- 22ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2,773 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை அடுத்த இரு ஆண்டுகளில் அதாவது 2023- 24ம் ஆண்டில் 2,455 ஆக குறைந்திருக்கிறது. 2023- 24ம் ஆண்டுக்கு பிந்தைய இரு ஆண்டுகளில் மேலும் 300 ஜவுளி ஆலைகள் மூடப்பட்டு விட்டதாக ஜவுளி ஆலைகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ”தி இந்து” ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதேபோல், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி ஆலைகளும், விசைத்தறிகளும் மூடப்பட்டதற்கு முதன்மைக் காரணம் மின்கட்டண உயர்வு தான் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் 42% அளவுக்கு, அதாவது ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி ஆலைகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. ஜவுளி ஆலைகள் அதிகம் அமைந்துள்ள அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.1 கூடுதலாக இருப்பதாகவும், மின்சாரத்திற்காக இவ்வளவு செலவு செய்து தயாரிக்கப்படும் துணி வகைகளை சந்தையில் பிற மாநில ஆலைகளுடன் போட்டியிட்டு விற்க முடியாது என்பதால் தான் ஜவுளி ஆலைகளும், விசைத்தறிகளும் மூடப்பட்டு விட்டதாக ஜவுளித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தொழில்துறையினர் மீது திட்டமிட்டு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை சமாளிக்க முடியாமல் தான் ஜவுளி ஆலைகளும், பிற சிறு, குறு மற்றும் தடுத்தர நிறுவனங்களும் தங்களின் ஆலைகளை மூடி விட்டு வெளி மாநிலங்களுக்கு ஓடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்து விட்டன.
நிர்வாகத் திறன் இல்லாத, ஊழலில் மட்டுமே திளைக்கக் கூடிய திமுக அரசுக்கு தொழில் துறையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதனால் தான் தமிழ்நாட்டில் தொழில்துறை சீரழிந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வரும் தேர்தலில் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.