’கருப்பு’ படத்துக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமானது எப்படி என்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இப்படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் உள்ளது. ஆனால், இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. பின்பு சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி பணிபுரிந்து வருகிறார்.
முதன் முறையாக சாய் அபயங்கர் படத்துக்குள் இசையமைப்பாளராக வந்தது எப்படி என்று ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கிறார். அதில், “முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான் இசையமைப்பதாக இருந்தது. அனைத்துமே அறிவித்தவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் சாரால் செய்ய முடியாமல் போனது.
உடனே அனைவரும் சோகமானார்கள். அப்போது தான் சாய் அபயங்கர் அணியில் உள்ள ஒருவருக்கு தொலைபேசி வாயிலாக, அவர் இசையமைத்தால் எப்படியிருக்கும் எனக் கேட்டேன். தயாரிப்பாளர், சூர்யா சார் உள்ளிட்ட அனைவருமே முதலில் சாய் அபயங்கர் என்றவுடன் ஷாக் ஆனார்கள்.
நான் யார் தெரியுமா? என்ன பண்ணுவேன் தெரியுமா? என்று நிரூபிக்கும் வேகத்தில் இருக்கிறான். அவனுடைய எனர்ஜி எனது படத்துக்கு உபயோகமாக இருக்கும் என நினைத்தேன். அது இப்போது 200% உண்மையாகி இருக்கிறது. இப்போது அவர் ஜாவா சுந்தரேசன் மாதிரி அல்லு அர்ஜுன் படம் உள்ளிட்ட நிறைய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
ஆனால், எங்களுடைய படத்துக்கு ரொம்ப நன்றாக பணிபுரிந்துள்ளார். இப்போது பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் போய்க் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.