

சென்னை: பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்கை செய்யக்கோரி, சென்னை துரைப்பாக்கத்தில் அன்புமணி, சவுமியா ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகரை பெருவெள்ள ஆபத்தில் இருந்து காக்க, நிலத்தடி நீர்வளம் பெருக்க, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கிமீ கட்டுமானம் தவிர்க்க “பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்கை” செய்யக்கோரி நேற்று பாமக தலைவர் அன்புமணி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும் தருமபுரி தொகுதி எம்எல்ஏவுமான சவுமியா அன்புமணி ஆகியோர் துரைப்பாக்கத்தில் உள்ள துரைப்பாக்கம் - பல்லாவரம் 200 அடி சாலையில் விழிப்புணர்வு பேரணி நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
இந்த நிகழ்வில் அன்புமணி பேசியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது வரை வரையறை படுத்தப்படவில்லை. இதுதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று வரையறைபடுத்தி அறிவிக்கை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சதுப்பு நிலம் பாதுகாக்கப்படும். இந்த நிலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்கர் அளவில் இருந்தது.
தற்போது 2,500 ஏக்கர் மட்டும் தான் இருக்கிறது. அத்தனை இடங்களும் அடையாறு பெருங்குடி என்று வீடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. ஊழல் செய்வதற்காகத்தான் 2 திராவிட கட்சிகளும் இவ்வளவு ஆண்டுகளாக சதுப்பு நிலத்தை பாதுகாக்கவில்லை. தமிழகத்தில் 20 இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், இந்த இடம் தான் மிகவும் பெரியது. அதுவும் சென்னையில் உள்ளது. பசுமை தீர்ப்பாயம் ஆணையில், சதுப்பு நிலத்துக்கு ஒரு கிமீ சுற்றிலும் எந்த கட்டுமானமும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பூர்வ குடிமக்கள் வீடு கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தமிழக அரசு எது சதுப்பு நிலம், எதுவரை இந்த நிலம் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு அதை அறிவிக்கையாக வெளியிட வேண்டும். இளைய தலைமுறையில் ஏதேதோ விஷயங்களுக்காக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுகிறீர்கள்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ரீல்ஸ் போடுங்கள். தமிழக சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டாராக சவுமியா அன்புமணி இருக்கிறார். சென்னைக்கு கண்டிப்பாக 2-வது விமான நிலையம் வேண்டும்.
ஆனால், அதை எங்கே கொண்டு வருவது என்பதுதான் பிரச்சினையாக உள்ளது. பரந்தூரில் விவசாய நிலங்கள் அழிக்கப்படக்கூடாது. தமிழக அரசு ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதேபோல், செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தக்கூடாது. பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டத்துக்கு தான் பயன்படுத்த வேண்டும்.
அங்கு மிகப்பெரிய நீர் தேக்கத்தை உருவாக்க வேண்டும். அதை மீறி வேறு ஏதாவது திட்டத்திற்கு பயன்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பறவைகள் சரணாலயம்
சவுமியா அன்புமணி பேசுகையில், “தமிழக அரசு பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க சேட்டிலைட் மூலமாக அளவீடு செய்ய வேண்டும். வேடந்தாங்கல் சரணாலயம் போல், பள்ளிக்கரணையில் பறவைகள் சரணாலயம் இருக்கிறது.
இந்த பறவைகளையும், இந்த இயற்கையையும் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நாம் பாதுகாக்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்” என்றார்.