

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2024-25-ம் ஆண்டில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் வெறும் 16 சதவீதம் மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. 80.66 சதவீத மின்சாரம் வெளியாரிடமிருந்து வாங்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை ஒரு மெகாவாட் அளவுக்குக்கூட புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
ரூ.10,158 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டு 20 மாதங்கள் ஆகும் நிலையில், இன்று வரை அதில் வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதன் மூலம் மின்வாரியத்துக்கு இதுவரை ரூ.1 லட்சத்து 28,363 கோடி கூடுதலாக வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால், மின்வாரியம் இன்னும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் மின்சார கொள்முதல் ஊழல்கள்தான்.
தனியாரிடம் மின்சாரம் வாங்கி பல்லாயிரம் கோடி ஊழல் செய்வதற்காகவே மின் திட்டங்களை செயல்படுத்த திமுக ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள். தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.