

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் | கோப்புப் படம் |
சென்னை: ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதி அளித்தார்.
தெற்கு ரயில்வே சார்பில், 129-வது மண்டல ரயில்வே பயனர்கள் ஆலோசனைக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு ரயில்வே பொது மேலாளரும், குழுவின் தலைவருமான ஆர்.என். சிங் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரமேஷ், மாநில அரசு பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள், பதிவு செய்யப்பட்ட பயணிகள்சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளை உறுப்பினர்கள், நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ரயில்வே அமைச்சரால் சிறப்புப் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், தெற்கு ரயில்வேயின், 6 கோட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்ட ரயில்வே பயனர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் தெற்கு ரயில்வேயின் முதன்மைத் துறைத் தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தெற்கு ரயில்வே மேற்கொண்டு வரும் மேம்பாட்டுப் பணிகளுக்கு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். தங்கள் பகுதி சார்ந்த ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன் வைத்தனர். ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துதல், ரயில்களை நீட்டிப்பு செய்தல் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில், பொது மேலாளர் ஆர்.என். சிங் பேசுகையில், “தெற்கு ரயில்வே எப்போதும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மண்டலமாகச் செயல்படுகிறது.
செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், பயணிகளின் சேவைகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார். தெற்கு ரயில்வே துணை பொது மேலாளர் அஜய் கவுஷிக் நன்றி தெரிவித்தார்.