

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவரை நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் டிடிசிபி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான பி.டி. அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டது அம்பலமானது.
இந்த முறைகேட்டில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 20 வங்கிக் கணக்குகளுக்கும், அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பரும், சங்கத்தின் மாநில பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான முத்துக்குமார் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளுக்கும் பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அன்பில் மகேஸ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 16-ம் தேதி நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பளித்தார்.
முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்த அன்பில் மகேஸ், அமைந்தகரையில் உள்ள தனது வழக்கறிஞர் பி. வில்சன் அலுவலகத்திற்குச் சென்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்து வெளியே வந்த அவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்யமூர்த்தி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அன்பில் மகேஸை நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.