

சென்னை: ‘தமிழகத்தில் உள்ள 36 ஆயிரம் ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி பேசும்போது, “தமிழகத்தில் உள்ள பெரிய ஆறுகளில் தடுப்பணை கட்டினால் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும். தண்ணீரை சேமிக்கலாம்.
அதேபோல், ஏரிகளை தூர்வாரினால் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் மானியங்கள் முறையாக விவசாயிகளுக்குச் சென்று சேரவில்லை என்று அரசு அதிகாரிகளின் மீதும் விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி பெண்களின் மகிழ்ச்சியை உறுதி செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டத்துக்கு காவிரி உபரி நீரைக் கொண்டு வரவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதற்குப் பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், “கடந்த காலங்களைவிட நீர்வளத்துறைக்கு அதிக நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். தனியார் பங்களிப்புடன் ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணிகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள 22 ஆயிரம் ஏரிகள், நீர்வளத் துறையில் உள்ள 14 ஆயிரம் ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தருமபுரி மாவட்டத்துக்கு அனைத்தும் செய்து கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.