

புதுடெல்லி: உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் சவாலான பிரிவில் இடம் பெற்றுள்ள போதிலும் நேஷன்ஸ் கோப்பையை வென்றுள்ளது நம்பிக்கையை கொடுத்துள்ளதாக இந்திய மகளிர் அணியின் கேப்டன் சலிமா டெட் தெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 15-ம் முதல் 30-ம் தேதி வரை நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறுகிறது. 16 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
சலிமா டெட் தலைமையிலான இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூஸிலாந்தில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் சலிமா டெட் கூறியதாவது: இந்த முறை, எஃப்ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை எங்களுடையதாக இருக்கும்.
நாங்கள் திறமையாகவும், அதிரடியாகத் தாக்கியும் விளையாடிப் பதக்கத்தோடு திரும்புவோம். எங்களது அணியின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதைச் செய்து காட்டும் திறமை எங்களிடம் இருக்கிறது.
நியூஸிலாந்தில் நாங்கள் விளையாடிய கடைசித் தொடரான நேஷன்ஸ் கோப்பை மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. எனவே இந்த முறை, உலகக் கோப்பையிலும் பதக்கம் வெல்வதே எங்களின் இலக்கு. ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது.
அனைத்துப் போட்டிகளையும் நாங்கள் ஒரே மாதிரியான முக்கியத்துவத்துடனே அணுகுவோம். எங்களின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வெல்வதில் உறுதியாக இருக்கிறோம்.
உலகக் கோப்பையில் விளையாடுவது ஒவ்வொரு வீராங்கனையின் கனவாகும். இது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. நேஷன்ஸ் கோப்பை, புரோ லீக் தொடர்களைப் போலவே, இதிலும் உலகின் முன்னணி அணிகள் போட்டியிடும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
உலகக் கோப்பையில் எங்கள் பிரிவு மிகவும் சவாலானது; எனவே கடினமான போட்டிகளுக்கு எங்களை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம். தெளிவான திட்டமிட்ட வியூகத்துடனும், வெற்றிபெறும் மனநிலையுடனும் ஒவ்வொரு போட்டியிலும் களம் இறங்குவதே எங்களின் இலக்காகும்.
எனக்கு பதற்றமாகத்தான் இருக்கிறது, அது இயல்பானதுதான். ஒவ்வொரு வீராங்கனையும் இந்த உணர்வைக் கடந்துதான் வருவார்கள்.
ஆனால், களத்தில் இறங்கும்போதெல்லாம், அணிக்காக விளையாட வேண்டும், சக வீரராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் மற்றும் பொறுப்பேற்று விளையாட வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக்கொள்வேன்.
நாங்கள் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, நான் எங்கள் அணிக்கு உறுதுணையாக நிற்பேன். அணியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்.
யாராவது தவறு செய்தாலும் பரவாயில்லை, அதிலிருந்து கற்றுக்கொண்டு எங்களை உயர்த்திக் கொள்வோம். அணிக்கு நேர்மறையான எண்ணங்களையும் சுறுசுறுப்பான ஆற்றலையும் கொண்டு வர விரும்புகிறேன்.
ஜூனியர் வீரர்கள் அணிக்குள் வரும்போது அதிக அளவிலான ஆற்றலைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் எப்போதும் எங்களிடம், ‘அக்கா நாம் கடுமையாக உழைக்க வேண்டும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், பதக்கத்தை நாம் வெல்ல வேண்டும்’ என்று சொல்வார்கள்.
அவர்களிடம் இருந்து இதைக் கேட்பது எங்கள் அனைவருக்கும் நேர்மறையான ஆற்றலைத் தருகிறது. எந்தவொரு அழுத்தமும் இன்றி சுதந்திரமாக ஆட்டத்தை ரசிக்குமாறு ரசித்து விளையாடுமாறு இளம் வீராங்கனைகளிடம் கூறுவேன்.
அழுத்தங்களைச் சுமப்பது அவர்களின் வேலை இல்லை. அதைக் கையாள சீனியர்களான நாங்கள் இருக்கிறோம். இளம் வீராங்கனைகள் தங்கள் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி, களத்தில் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அவர்கள் மன அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாடும்போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அது ஒட்டுமொத்த அணிக்கும் பெரிதும் உதவுகிறது இவ்வாறு சலிமா டெட் கூறினார்.