

புதுச்சேரி: புதுச்சேரி பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 119 பேர் கோடீஸ்வரர்கள். அதிக சொத்தும், அதிக கடனும் உள்ள முதல் 3 வேட்பாளர்கள் என்டிஏ கூட்டணியைச் சேர்தவர்கள்.
இதுதொடர்பாக புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரங்களை தேர்தல் கண்காணிப்பகம் ஆய்வு செய்து அறிக்கைகளை, கடந்த 2011 முதல் 6 தேர்தல்களாக வெளியிட்டு வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளில் 294 பேர் போட்டியிடுகின்றனர். அதில் 291 பேரின் சுய உறுதிமொழி வாக்குமூலம் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 34 வேட்பாளர்கள் தேசியக் கட்சிகளையும், 63 பேர் மாநில கட்சிகளையும், 80 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளையும், 117 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களில் ஆய்வு செய்யப்பட்ட 291 பேரில் 66 பேர் (23 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28 பேர் (13 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இதில் 2 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும், 3 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வேட்பாளர்களில் 3 பேர் மீதும், என்ஆர்காங்கிரஸில் 4 பேர் மீதும், பாஜகவில் 5 பேர் மீது்ம், திமுகவில் 6 பேர் மீதும், அதிமுகவில் ஒருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேட்பாளர்களில் 119 பேர் அதாவது 41 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
என்ஆர்காங்கிரஸ், பாஜக, லஜகவில் 100 சதவீத பேரும், காங்கிரஸில் போட்டியிடும் 21 பேரில் 17 பேரும் கோடீஸ்வர்களாக உள்ளனர். புதுச்சேரி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.21 கோடியாக உள்ளது.
வேட்பாளர்களில் லஜக வேட்பாளர் ஜோஸ்சார்லஸ் மார்டின் ரூ.609 கோடி சொத்துகளுடன் முதலிடத்திலும், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் ரூ.115 கோடிகளுடன் 2-ம் இடத்திலும், அமைச்சர் நமச்சிவாயம் ரூ.85 கோடியுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர்.
அதிக கடன் உள்ளவர்களில் ஜோஸ் சார்லஸ் ரூ.210 கோடிகளுடன் முதலிடமும், ராமலிங்கம் ரூ.30 கோடிகளுடன் 2-ம் இடமும், நமச்சிவாயம் ரூ. 20 கோடிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் அதிக ஆண்டு வருவாய் உள்ளோரில் ஜோஸ் சார்லஸ் முதலிடத்திலும் (ஆண்டுக்கு ரூ.59 கோடி), பாமக கோபாலகிருஷ்ணன் (ரூ. 6 கோடி) இரண்டாம் இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் வசந்த குமார் ரூ.1 கோடியுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர்.
வேட்பாளர்களில் 134 பேர் பட்டப்படிப்பும் அதற்கு மேல் படித்தவர்கள். 125 வேட்பாளர்கள் 5 முதல் 12-ம் வகுப்பு படித்தவர்கள். 25 பேர் பட்டயப்படிப்பும், 4 பேர் படிக்காதவர்களாக உள்ளனர். வேட்பாளர்களில் 61 முதல் 80 வயதுக்கு உடையவர்கள் 53 பேர்.
அதே போல் 41 முதல் 60 வயது வரை 165 பேர் உள்ளனர். 25 முதல் 40 வயது வரை 73 பேர் உள்ளனர். இம்முறை மொத்தம் 40 பெண்கள் போட்டியிடுகின்றனர். இது 14 சதவீதம் ஆகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.