

தஞ்சாவூர்: தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் இன்று (ஜன.5) காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மாநகர செயலாளர் ராஜேஸ்வரன் வரவேற்றார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் எம்.ரங்கசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
> 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
> முல்லைப் பெரியாறு, காவிரியில் புதிய அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடகம் மற்றும் கேரளா அரசுகளின் முயற்சியை தடுத்து நிறுத்திட திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
> வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலம் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> தமிழகத்துக்கென தனியாக சாதி வாரி கணக்கெடுப்பினை நடத்திட தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
> பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> தமிழகத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களையும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தை மறு பரிசீலனை செய்து திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
> இலங்கைக்கு தாரைவாக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயலால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை அதிகரித்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.