

அமித் ஷா
சென்னை/ புதுச்சேரி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் (சிஜேபி) போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகம், புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் உயரிய வண்ண விருது (President's Police Colour Award) அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் மக்கள் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான விழா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் மைதானத்தில் இன்று மாலை நடைபெற இருந்தது. விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று, காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதை வழங்கி கவுரவிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து இன்று தனி விமானத்தில் சென்னை வந்து, இங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு அமித் ஷா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் விழாவை முடித்துக் கொண்டு தனி ஹெலிகாப்டரில் சென்னைக்கு வருவதாகவும், சென்னையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு, தனி விமானத்தில் டெல்லி திரும்புவதாகவும் அமித் ஷாவின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அவரது வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டமும் நேற்று நடைபெற்றது.
இதற்கிடையே, டெல்லியில் சிஜேபி நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதோடு, டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, டெல்லி முழுவதும் பதற்ற நிலை நிலவுகிறது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களில் போராட்டம் விரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகம், புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.