திருச்சி வந்த அமித் ஷா - பாஜக, அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

திருச்சி வந்த அமித் ஷா - பாஜக, அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
Updated on
2 min read

திருச்சி: தமிகழகத்தில் 2 நாள் பயணம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று வந்தார். அந்தமான் நிக்கோபர் போர்ட் பிளேயர் விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் பாதுகாப்புத்துறை அமைச்சக விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 2.56க்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அர்ஜூன் ராம் மேக்வால், பியூஷ் கோயல், முரளிதர் மொஹல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜய பாஸ்கர், ஆர்.காமராஜ், மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் பாலாஜி சிவராஜ், மணிமொழி, விஹெச்பி நிர்வாகி முருகேசன், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கணேசன், நேருதாசன், திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகர காவல் ஆணையர் என்.காமினி உள்ளிட்ட 18 பேர் வரவேற்றனர்.

அங்கிருந்து 3.07க்கு காரில் புறப்பட்ட அமித் ஷா, திருச்சியில் உள்ள கோர்ட் யார்டு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்தார். பிறகு அங்கிருந்து மாலை 4.50க்கு காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்குச் சென்றார். புதுக்கோட்டை கருவேப்பிலான் கேட் பகுதியில் நடைபெற்ற தமிழக பாஜக தலைவர் மேற்கொண்டுள்ள தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

பின் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு இரவு 8 மணியளவில் திருச்சி கோர்ட் யார்டு ஓட்டல் வருகிறார். இரவு 9 மணியளவில் பாஜக மையக்குழுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 21 பேர் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் வரப்போகும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு கூட்டணியை வலுப்படுத்துவது, தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. பின்னர் இரவு ஓய்வெடுக்கும் அமித்ஷா, நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். தவிர, திருவானைக்காவல் கோயில் செல்லவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

சாமி தரிசனம் முடித்த பிறகு மதியம் 12 மணியளவில் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நம்ம ஊரு மோடி ஜி பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளார்.

அமித் ஷா வருகையை முன்னிட்டு திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் 2 மாவட்டங்களிலும் உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி வந்த அமித் ஷா - பாஜக, அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in