அமெரிக்காவின் அடுத்த குறி... ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் எச்சரிக்கை!

Greenland PM warns Trump

ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன்

Updated on
1 min read

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தீவு தேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. அங்கு ரேர் எர்த் மினரல்ஸ் எனப்படும் அரிதான கனிம வளங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொட்டே கிரீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார் டொனால்டு ட்ரம்ப்.

போதைப் பொருள் பயங்கரவாதத்தை அமெரிக்கா மீது ஏவிவிடுவதாக வெனிசுலா மீது குற்றஞ்சாட்டி வந்த ட்ரம்ப், அந்தப் பெயரில் வெனிசுலா நாட்டு அதிபரை சிறைப்பிடித்துள்ளார். இந்நிலையில், தற்போது ட்ரம்ப் க்ரீன்லாந்து மீதான தனது வேட்கையை மீண்டும் பகிரங்கமாகத் தெரிவிக்க, அது தற்போது கவனம் பெற்றுள்ளது.

தனது பிரத்யேக விமானத்தில் இருந்து ட்ரம்ப் அளித்த அந்தப் பேட்டியில், “அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு ரீதியாக கிரீன்லாந்து இப்போது மிக முக்கியப் புள்ளியாக இருக்கிறது. கிரீன்லாந்து முழுவதுமே ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் உள்ளன. அதனால் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தப் பகுதியை அமெரிக்காவுடன் இணைப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.

இதுபோல் ட்ரம்ப் முன்னர் ‘தி அட்லாண்டிக்’ என்ற இதழுக்கு அளித்தப் பேட்டியிலும் கூறியிருந்தார். அப்போது அதற்கு டென்மார்க் நாட்டு பிரதமர், “கிரீன்லாந்தை ஆக்கிரமித்துக் கொள்ள விரும்புவதாக அமெரிக்கா சொல்வது முட்டாள்தனமானது. டென்மார்க் கட்டுப்பாட்டில் இருக்கும் மூன்று பகுதிகளில் எந்த ஒரு பகுதியினையும் இணைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை இல்லை” என்றார்.

ஞாயிறு இரவு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இன்னமும் அழுத்தம் தர வேண்டாம். மறைமுகமாகக் கூட உங்களின் ஆக்கிரமிப்பு எண்ணங்களைச் சொல்ல வேண்டாம். எப்படியாவது இணைத்துக் கொள்ளலாம் என்று கனவும் காண வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை சரியான முறையில் நடக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை மதிப்பதாக இருக்க வேண்டும்.

கிரீன்லாந்து எங்கள் வீடு, எங்கள் பிராந்தியம். இனியும் அப்படித்தான் இருக்கும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், “வரலாற்று ரீதியாக அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து நெருங்கிய கூட்டாளி. நாங்கள் பலமுற கிரீன்லந்து விற்பனைக்கு அல்ல என்று தெளிவாகத் தெரிவித்த பின்னரும் கூட ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இணைப்பு பற்றிப் பேசுவதும் சரியல்ல” என்றார் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in