

சென்னை: ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை மாற்றுவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை திமுக முன்னெடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரை தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்து பேசியதாவது: மீண்டும் ஒருமுறை ஆளுநர் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு, ஆளுநரால் முழுமையாகப் படிக்கப்பட வேண்டும். ஆளுநர் சொந்த கருத்துகளைத் தெரிவிக்கவோ, நீக்கவோ சட்டத்தில் இடமில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் உரை தொடர்பான தெளிவுரைகளைக் கேட்க அவருக்கு வழியில்லாவிட்டாலும், ஆளுநர் கோரிய விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இந்நிலையில், வேண்டுமென்றே அரசியலமைப்பை ஆளுநர் மீறியுள்ளார். நூற்றாண்டுகால மரபும், பாரம்பரியமும் கொண்ட மக்கள் சபையை, அதன் மாட்சிமையை ஆளுநர் செயல்பாடுகள் அவமதிக்கின்றன.
ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறையும், மக்கள் மேம்பாட்டில் ஆர்வமும் கொண்டவராக, உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்புகிறார்.
ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரை, இங்கு ஆளுநரால் படிக்கப்பட்டதாக பேரவை கருதுகிறது. மரபுவழி நிகழ்வுகள், பேரவைத் தலைவரால் படிக்கவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம் ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கை குறிப்பில் இடம் பெறலாம். இவ்வாறு பேசிய முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பல மாநிலங்களிலும் ஆளுநர்கள், ஆளும் அரசுக்கு இடைஞ்சலாக இருப்பது தொடர்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கை வாசிக்கும் நடைமுறையை தொடர்ந்து மீறும்போது, அதுபோன்ற விதிகளை எதற்காக வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
எனவே, ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் முயற்சிகளை, ஒருமித்த கருத்துகளைக் கொண்ட கட்சிகளின் துணையுடன் நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.