

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல்நாளான நேற்று தேசிய கீதம் இசைக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், பேரவையில் இருந்து வெளியேறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3-வது ஆண்டாக ஆளுநரின் உரையை, பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் 2026-ம் ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 20-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நடப்பாண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9:23 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு, செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்று, சட்டப்பேரவைக்கு உள்ளே அழைத்துச் சென்றனர். அவருக்கு முன்பாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பேரவைக்குள் வந்து அமர்ந்திருந்தனர். காலை 9.29 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு, தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பான ஒரு கருத்தை தெரிவித்தார்.
அதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு, ‘‘ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதே வழக்கம். இதுதான் மரபு. இந்த அவையில் மக்களால் தேர்வான உறுப்பினர்கள் மட்டுமே கருத்துகளைக் கூறமுடியும். ஆளுநர் தனியாக கருத்து கூற உரிமை கிடையாது. அரசு எழுதி தருவதை அப்படியே படிக்க வேண்டும். ஆளுநர் உரையும் முன்கூட்டியே அவரிடம் வழங்கி உறுதிசெய்த பிறகுதான் அச்சடிக்கப்பட்டு, இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது’’என்றார். மேலும், உரையைத் தொடங்குமாறு அவர் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால், உரையைப் படிக்க மறுத்த ஆளுநர் ரவி சில கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, அவையை விட்டு வெளியேறினார். அப்போது ஆளுநரைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவுபேசும்போது ‘‘தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் எனக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதினார். அதற்கு பதிலும் வழங்கப்பட்டது. மேலும், பேரவை முன்னவர் துரைமுருகனாலும் விரிவாக விளக்கப்பட்டது’’என்றார்.
இதையடுத்து, ஆளுநர் ரவி அரசியலமைப்பை தொடர்ந்து மீறுகிறார். எனவே, அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவர் படித்ததாக அவைக்குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “ஆண்டின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை மாற்ற, பிற மாநில அரசியல் கட்சிகளுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். பின்னர், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்து முடித்தார்.
முன்னதாக, ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதாகக் கூறி அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி) எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து 3-வது ஆண்டாக தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையை படிக்க மறுத்து வெளியேறியதால், பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநரின் உரையைப் படித்தது குறிப்பிடத்தக்கது.
உரையை வாசிக்காததற்கு காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதற்கான காரணங்களை விளக்கி ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பேரவைத் கூட்டத்தில் ஆளுநரின் `மைக்' மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. உரையில் ஆதாரமற்ற, தவறான தகவல்கள் இருந்ததுடன், முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றுதெரிவித்துள்ளது உண்மைக்குப் புறம்பானது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டும்தான். முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நான்கு ஆண்டுக்கு முன்பு அந்நியநேரடி முதலீட்டைப் பெறுவதில் 4-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 6-வது இடத்தில் நீடிக்கவே போராடுகிறது.
போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்துக்கு மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் 33 சதவீதத்துக்கு மேலாகவும் அதிகரித்துள்ளன. பள்ளி மாணவர், இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பட்டியல் இனத்தவருக்கு எதிரான அட்டூழியங்களும், பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. ஒரே ஆண்டில் சுமார் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவின் தற்கொலைதலைநகரமாக தமிழகம் திகழ்கிறது.
கல்வித் தரத்தில் சரிவும், கல்வி நிறுவனங்களில் நிர்வாகச் சீர்கேடும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது அரசியலமைப்புக்கு எதிரானது. ஆயிரக்கணக்கான கோயில்களில் அறங்காவலர் குழு இல்லை. கோயில்களின் தவறான நிர்வாகத்தால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பழங்கால கோயில்கள் மீட்பு குறித்த உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் செயல்படுத்தப்படவில்லை.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தற்போது 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தொழில்முனைவோர் தங்கள்நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களின் நியாயமான குறைகள் தீர்க்கப்படவில்லை. தேசியகீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை அரசியலமைப்புக் கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.