அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா
Updated on
1 min read

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், அதிமுகவினர் தவெகவை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில், சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் அறிவித்தார். அதோடு அவர்கள் தங்களை தவெகவில் இணைந்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் பதவி விலகலை சபாநாயகர் ஏற்றதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.

இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி அளிக்க வேண்டிய நிலையில், டைப் செய்து கொண்டு வந்ததால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்க மறுப்பு தெரிவித்தார். பின்னர் அவர் எழுதி கொடுத்த நிலையில் கடிதம் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது. விரைவில் அவர் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசக்கி சுப்பையா 2011, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆட்சியில் இவர் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

இசக்கி சுப்பையாவை தொடர்ந்து மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களும் தவெக பக்கம் சாயலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதன்மூலம், ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா
“இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டுமா சி.எம் சார்?” - உதயநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in